வாழ்க்கைக்கு பொருந்தாத பெரிதும் பாதிப்பான உலகிற்கு குழந்தைகளை அழைத்து வருவது குறித்து இருமுறை யோசிக்கவேண்டும் என்று கனேடிய பதின்ம வயதினர் தெரிவித்துள்ளனர்.
வைஸ் கனடா இணைய ஊடகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வௌியிட்டுள்ள செய்தியில், 18 வயதான எம்மா லிம் என்ற பெண்ணின் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்தும் இளம் தலைமுறையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற நெருக்கடி தொடர்பில் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான தனது போராட்டத்தில், எம்மா லிம் புதிய பேரம் பேசும் யுக்திகளை பயன்படுத்துகிறார்.
இதற்காக அவர் தனது முதல் குழந்தைப் பேறையும் விட்டுக்கொடுப்பதாக சபதம் செய்துள்ளார். குறைந்தபட்சம் கோட்பாட்டளவில் இதனை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
தனது போராட்டத்திற்கு #NoFutureNoChildren என்ற ஹாஷ்ரக்கையும் சமூகவலைத்தளங்களில் அவர் பயன்படுத்துகின்றார். இதற்கு கனடா முழுவதிலும் உள்ள பதின்மவயதினர் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், ஃபெடரல் அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் தளங்களில், காலநிலை மாற்றக் கொள்கையை முன்வைத்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை குழந்தைகளைப் பெறக்கூடாது என்று இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புமிகுந்த, பெரும் மாசுகளைக் கொண்ட இந்த உலகத்திற்கு எதிர்கால தலைமுறையை பலவந்தமாக அழைத்து வருவது குறித்து இன்றைய சமுதாயத்தினர் இருமுறை சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.