Reading Time: 2 minutes

கனடாவில் முன்னாள் பழங்குடியின பள்ளிகளில் அடையாளப்படுத்தப்படாத பல நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆண்டுதோரும் ஜூலை -01 கோலாகலமாகக் கொண்டாடப்படும் கனடா தினம் இம்முறை களையிழந்தது.

மனித எச்சங்கள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல மாகாணங்கள் கனடா தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்தன.

அதற்குப் பதிலாக பழங்குடி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒட்டாவா, ரொரண்டோ உள்ளிட்ட பல நகரங்களில் பேரணிகள், ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.

கடந்த மே மாதம் முதல் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்பு பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாண தலைநகர் ரெஜினாவிலிருந்து 140 கிலோ மீற்றா் தொலைவில் உள்ள மேரிவல் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் கடந்த மாத இறுதியில் 751மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மற்றொரு முன்னாள் பழங்குடிச் சிறுவர் குடியிருப்புப் பள்ளியில் இருந்து மேலும் 182 மனித எச்சங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டன.

19ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை கனேடிய பழங்குடியின சிறுவர்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியிருப்பு பள்ளிகள் இருந்தன. கனேடிய அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள் கத்தோலிக்க திருச்சபையால் இயக்கப்பட்டன.

இங்கு இணைய நிர்ப்பந்தக்கப்பட்ட பழங்குடி சிறுவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய சொந்த மொழிகளைப் பேச குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பல பழங்குடியின குழந்தைகள் உடல், உள ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் 6,000 குழந்தைகள் ரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் 2008 இல் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது. இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் பரவலாக இருந்ததையும் கனேடிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

பல மாணவர்கள் தங்கள் சொந்த மொழிகளைப் பேசியதற்காக தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். பெற்றோர் மற்றும் தங்கள் காலாசார அடையாளங்களில் இருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். இதுவொரு கலாசார இனப்படுகொலையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் அண்மைக் காலங்களில் கனடா பழங்குடியின முன்னாள் குடியிருப்பு பள்ளிகளில் அங்கு பயின்ற குழந்தைகளின் எச்சங்கள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான கவலைகளுக்கு மத்தியிலேயே கனடா தினக் கொண்டாட்டங்கள் இம்முறை களையிழந்தன.

இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கனடா தினத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாா்.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் நேற்று நடந்த கனடா தினத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தும் (#CancelCanadaDay) அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் ஒரேஞ்ச் நிற உடைகளை அணிந்து ஒன்றுகூடினர்.

கனடாவின் குடியிருப்பு பள்ளி திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் அவா்கள் நினைவுகூர்ந்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

“இனப்படுகொலையில் எந்தப் பெருமையும் இல்லை” என எழுதப்பட்ட பாதாகைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர்.

பழங்குடி மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கனடாவின் நிதி தலைநகரான ரொராண்டோவிலும் நேற்று அணிவகுப்பு இடம்பெற்றது. அணிவகுப்பின் போது உள்நாட்டு கலைஞரான டேனியல் மிக்வான்ஸ் பழங்குடி மக்களுடன் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனம் ஆடினார்.

இதேபோன்று கனடாவில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பழங்குடி மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பேரணிகள், ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.