Reading Time: < 1 minute

பழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் பழங்குடி குழந்தைகளின் வெகுஜன கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குழந்தைகள் நல அமைப்பால் பிரிக்கப்பட்ட பழங்குடி குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலுத்த உத்தரவிட்ட கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஜக்மீத் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் 215 பழங்குடி குழந்தைகளின் கண்டுபிடிப்பு தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது கனடாவின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தெளிவான சான்றின் மற்றொரு எடுத்துக்காட்டு. ஆனால், இது இரங்கலுக்கு அப்பால் தெளிவான நடவடிக்கைக்கு நாம் செல்ல வேண்டிய தருணம்.

பிரதமரிடம் நேரடியாக எனது கேள்வி என்னவென்றால், அவர் தனது வழக்கறிஞர்களை அழைப்பாரா? நீதிமன்றத்தில் பழங்குடி குழந்தைகளுடன் போராடுவதை அவர் நிறுத்துவாரா? என கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் ட்ரூடோ இந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக குடியிருப்பு பாடசாலைகளில் தப்பிப்பிழைத்த ஒவ்வொருவரும் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் என்றும், அவர்கள் ஆதரவைப் பெறச் சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் பழங்குடித் தலைவர்களுடன் தனது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.