குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்பு பள்ளிகளில் பராமரிக்கப்பட்ட கனடா பழங்குடிச் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கனடா மனித உரிமைகள் தீா்பாயம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து கூட்டாட்சி நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு 40,000 கனேடிய டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயம் 2016 இல் தீர்ப்பளித்தது. சில விதிவிலக்குகளுடன், குழந்தைகளின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளும் இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்றும் தீர்ப்பாயம் கூறியது.
எனினும் இந்தத் தீா்ப்பை எதிர்த்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் மேன் முறையிடு செய்தது. இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு பல மில்லியன் டொலர்கள் செலவாகும் என மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டது.
பழங்குடியின குழந்தைகள் பிரிக்கப்பட்டு பராமரிப்புப் பள்ளிகளில் பலவந்தமாக இணைக்கப்பட்டதன் மூலம் அவர்களிடையே பாகுபாடு காட்டப்பட்டது என மனித உரிமைகள் தீா்பாயத்தின் கண்டுபிடிப்புக்கள் சரியானதே. எனினும் இழப்பீட்டு உத்தரவு மிகைப்படுத்தல் என கனேடிய மத்திய அரசு வாதிட்டது.
எனினும் இந்த மேன்முறையீட்டை நீராகரித்து, மனித உரிமைகள் தீா்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து கூட்டாட்சி நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இதேவேளை, ட்ரூடோ அரசாங்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
அரசாங்கம் இந்த தீா்ப்பு குறித்து ஆராய்ந்து வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் வழக்கு தொடர்ந்த பழங்குடி சிறுவர் மற்றும் குடும்ப பராமரிப்பு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சிண்டி பிளாக்ஸ்டாக், இந்த தீர்ப்பு அரசாங்கத்தின் அனைத்து நயவஞ்சக வாதங்களையும் முழுமையாக நிராகரித்துள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த முழுமையான வெற்றி எனத் தெரிவித்தார்.