Reading Time: < 1 minute

கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கும் நிலையில், குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகள் அனைத்தும் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை பெற்றோர் சரிபார்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்பறைகளில் அதிக நேரம் ஒன்றாகச் செலவிடத் தொடங்குவதுடன், குளிர்காலமும் நெருங்கி வருவதால் பல்வேறு சுவாச நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் (Flu), COVID-19 மற்றும் RSV போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் குறிப்பாக இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால், குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகளை பெற்றோர் சரிபார்த்து, தேவையான தடுப்பூசிகள் தவறியிருந்தால் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தட்டம்மை குறித்து அதிகரிக்கும் கவலை

குறிப்பாக தட்டம்மை (Measles) மீண்டும் பரவி வருவது குறித்து கனடாவின் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான கனடாவின் சமீபத்திய தடுப்பூசி கண்காணிப்புத் தரவுகளின்படி, தகவல் வழங்கிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் இரண்டு வயதுக் குழந்தைகளில் சுமார் 85.3 சதவீதம் பேர் மட்டுமே Measles, Mumps and Rubella (MMR) தடுப்பூசியை தேவையான அளவில் பெற்றிருந்தனர்.

ஆனால் தட்டம்மை மிகவும் வேகமாகப் பரவக்கூடிய நோயாக இருப்பதால், சமூகத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 95 சதவீத தடுப்பூசி பாதுகாப்பு தேவைப்படுவதாக கனடா பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய தடுப்பூசி விகிதம் அந்த இலக்கை விட குறைவாக இருப்பது, தடுப்பூசி பெறாத அல்லது முழுமையாக தடுப்பூசி பெறாத சமூகங்களில் நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

ஒன்ராறியோ பெற்றோருக்கும் நினைவூட்டல்

ஒன்ராறியோவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

மாகாண விதிகளின்படி, செல்லுபடியாகும் விலக்கு இல்லாத பள்ளி மாணவர்கள் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி (Mumps), ரூபெல்லா, போலியோ, கக்குவான் இருமல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவைத் தொடர்புகொண்டு, குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகளைச் சரிபார்த்து தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகளை சரிபார்ப்பது அவர்களை மட்டுமல்லாது பள்ளிச் சமூகத்தையும் பாதுகாக்க உதவும் என சுகாதார அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.