பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்களுக்கு ஆபத்து மிக மிக குறைவு என்றாலும், எச்சரிக்கை தேவை என கனேடிய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சலுக்கு உலக அளவில் பல மில்லியன் கணக்கான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் மட்டும் 7.2 மில்லியன் எண்ணிக்கை கடந்துள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளன.
மிக அதிக பாதிப்பு அமெரிக்க மாகாணங்களில் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் தரப்பு, இது பல நாடுகளுக்கும் வியாபித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக பறவைக் காய்ச்சலானது அனைத்து வகையான பறவைகளையும் பாதிக்கக்கூடியது.
சிலவேளை மனிதர்களுக்கும் தொற்றும் ஆபத்தும் உள்ளது. கம்போடியாவில் 11 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக பலியானார். 2014க்கு பின்னர் பறவைக் காய்ச்சலால் மரணமடையும் முதல் நபர் இந்த சிறுமி என கம்போடியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தான், சிறுமியின் மரணம் தற்போது பல நாடுகளில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி மிக எளிதாக மனிதர்களும் தொற்றும் ஆபத்து தொடர்பிலும், இன்னொரு சுகாதார அவசர நிலை ஏற்படும் வாய்ப்பு தொடர்பிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கனேடிய சுகாதார முகமை தெரிவிக்கையில், மனிதர்களுக்கு பரவும் ஆபத்து மிக மிக குறைவு எனவும், பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளை தீண்டாதவரையில் பாதுகாப்பை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
1997க்கு பின்னர் உலகமெங்கும் 800 நபர்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் ஆப்பிரிக்க, ஆசிய நாட்டவர்களே பாதிக்கப்பட்டனர். 2014ல் தான் முதல் முறையாக கனேடியர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
அவர் சீனாவுக்கு சென்று திரும்பிய பின்னரே அவருக்கு பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது என கண்டறிந்தனர். மேலும், உரிய முறைப்படி சமைத்து உண்ணும் கோழி உணவால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது.
ஆனால் முட்டை எடுத்துக்கொள்வதால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம் என கனேடிய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.