ஒமிக்ரோன் உருத்திரிபு பரவல் மற்றும் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை கருமையாக்குவது குறித்து கனடிய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சோதனைகளை விரிவுபடுத்துவது மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் அமுல் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அனைத்துக் கனடியர்களும் நாட்டுக்குத் திரும்பியவுடன் கொவிட் எதிர்மறை பி.சி.ஆர். அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்வோருக்கும் இது பொருந்தும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாகாண முதல்வர்களைத் தொடர்புகொண்ட பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீண்டும் எல்லைகளை மூடுவது உள்ளிட்ட கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆராய்ந்துள்ளார்.
அத்தியாவசிய தொழிலாளர்கள் தவிர்ந்த அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதிப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
எனினும் அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி உள்ளிட்ட சில முதல்வர்கள் எல்லை மூடல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் ஏற்கனவே கனடாவில் பரவியுள்ளதால் இனி எல்லை மூடல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமற்றது என முதல்வர் ஜேசன் கென்னி மத்திய அரசிடம் வலியுறுத்தியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
இதனையடுத்தே எல்லை மூடல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தை பின்னர் லிபரல் அரசு கைவிட்டதாக தெரியவருகிறது.
எனினும் நாட்டுக்கும் வரும் அனைத்து பயணிகளும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் கூட கொவிட் பரிசோதனை எதிர்மறை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், பி.சி.ஆர். முடிவுகள் வரும் வரை அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று வெளியாகும் என மத்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
எனினும் கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள், அகதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீளிணைவு கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்தும் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரியவருகிறது.