பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள், பயணம் புறபடுவதற்கு முன் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்றும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும், கனடாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் பிப்ரவரி 28 முதல் மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கும் என்றும் கனடா அறிவித்துள்ளது.
அத்துடன், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள், தற்போதைய நடைமுறைமையின்படி கொரோனா பரிசோதனைக்காக தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் புறப்படுவதற்கு முன் செய்துகொண்ட ஆன்டிஜன் பரிசோதனை, அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ, அந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்பதுடன், அது அவர்கள் கனடா எல்லையை அடைவதற்கு 24 மணி நேரம் முன்பு அல்லது பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு அது செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போதும் பயணிகள் பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட PCR பரிசோதனையையும் பயன்படுத்தவும் அனுமதி உண்டு.
என்றாலும், பயணிகள் தங்கள் ஆவணங்களை எல்லையைக் கடப்பதற்கு முன்பு ArriveCAN ஆப்பில் பதிவேற்றம் செய்துதான் ஆகவேண்டும் என்ற விதியில் மாற்றம் இல்லை.
அதுபோல, தடுப்பூசி பெறாத பயணிகள், கனடா வந்ததும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். அத்துடன், அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, எட்டாவது நாளும் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சரான Jean-Yves Duclos, போக்குவரத்துத்துறை அமைச்சர், பொது பாதுகாப்புத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள் துறை அமைச்சர் ஆகியோருடன் இணைந்து இம்மாதம் 15ஆம் திகதி, அதாவது நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அத்துடன், போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra, இம்மாத இறுதியில் மீண்டும் சர்வதேச விமான சேவை துவங்கும் என்றும், இனி கனேடியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அரசு பரிந்துரைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். என்றாலும், கனேடியர்கள் கொரோனா காலகட்டத்தின்போது சர்வதேச பயணம் செய்வதிலுள்ள அபாயங்களை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.