Reading Time: < 1 minute

மனிட்டோபாவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் தொடர்வதுடன், அதனால் அங்குள்ள பல பிராந்தியங்களில் மின் வினியோகமும் தடைப்பட்டுள்ள நிலையில், மாநிலம் தழுவிய அவசரகால நிலையினை அறிவிக்கப்போவதாக மனிட்டோபா முதல்வர் தெரிவித்துள்ளார்.

மனிட்டோபா மின் வாரியம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து, இன்று ஊடக மாநாடு ஒன்றினைக் கூட்டிய முதல்வர் பிரையன் பளிஸ்ட்டர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

வினிப்பெக் போன்ற பகுதிகளில் பனிப் புயலின் வேகம் தணிந்துள்ள போதிலும், இன்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கானோர் மின் வினியோகம் இன்றி இருட்டில் இருக்கும் நிலை காணப்படுகிறது.

மின்வாரியப் பணியாளர்கள் மின் வினியோகத்தைச் சீர் செய்வதற்கு பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், சுமார் 53,000 வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் வினிப்பெக்கில் மட்டும் 7,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றித் தவிப்பதாக கூறப்படுகிறது.