Reading Time: < 1 minute

பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களிலிருந்து உயிர் தப்பிய கனடாவின் மொன்றியல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 10 வயது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

Tamil Business Directory

பட்ரிசியா சுக்காலா என்ற பெண், கடந்த வெள்ளிக்கிழமை தனது விடுமுறையின் இறுதி நாளில் மகளுடன் ஹோட்டல் உணவகத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கட்டடம் கடுமையாக அதிர்ந்ததுடன், சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் கீழே விழுந்துள்ளன.

மகளுடன் வெளியேற முயன்றபோது மக்கள் கூட்டத்தில் மகள் மிதிபடும் அபாயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், உடனடியாக மகளைப் பிடித்து மேசையின் கீழ் சென்று இருவரும் தலையைப் பாதுகாத்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.

நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஹோட்டல் கட்டடத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டதுடன், பலர் பொருட்கள் விழுந்ததில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

பனாமாவின் 10 மாகாணங்கள் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் சேதங்கள் பதிவாகியுள்ளன. 7.7 மற்றும் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

பலர் காயமடைந்தபோதிலும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை எனச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு பனாமா அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், விமான நிலைய மூடல் மற்றும் விமானச் சேவை ரத்துச் செய்யப்பட்டதால், சுக்காலாவும் அவரது மகளும் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

பயண ஏற்பாட்டு நிறுவனமான சன்விங், விமான நிலையத்தின் செயற்பாட்டு நிலைமைக்கு உட்பட்டு திங்கட்கிழமை மொன்றியலுக்கான விமானத்தில் அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக மகள் அச்சத்துடன் இருப்பதாகக் கூறிய சுக்காலா, இந்த அனுபவம் தமக்கும் மகளுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.