கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஒன் சவுண்ட் நகரில், குடியிருப்பு ஒன்றிற்குள் மான் ஒன்று ஜன்னலை உடைத்து புகுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார இறுதியில், ஒன் சவுண்ட் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் வேறொரு புகாரை விசாரித்து கொண்டிருந்தபோது, வாகன நிறுத்துமிடத்தில் மான் ஒன்று சுற்றித் திரிவதை கவனித்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த மக்களின் சத்தத்தால் மிரண்டு போன அந்த மான், திடீரென தரைத்தளத்தில் இருந்த ஒரு வீட்டின் படுக்கையறை ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்துள்ளது.
அந்த அறையில் இரண்டு பெண்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் அப்போது தூங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பொலிஸார் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
பின்னர் வீட்டின் பின்புறக் கதவை திறந்து வைத்து, மானை வெளியேற்ற பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். பலமுறை கதவை நோக்கி மானை வழிநடத்த முயன்றபோதும், இறுதியில் அந்த மான் வந்த அதே உடைந்த ஜன்னல் வழியாக மீண்டும் வெளியே குதித்து தப்பிச் சென்றதாக ஒன் சவுண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த பெண்ணொருவரின் கையில் லேசான கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், படுக்கையறைக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மானுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




