Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரின் மகளிடம் உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் இருந்தே உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை மருத்துவமனை செவிலியர்களிடமிருந்து தொடர்புடைய தொலைபேசி அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாக ஹெலன் பெல் தெரிவித்துள்ளார்.

இவரது தாயாரே குறித்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தங்களது வயதான தாயாரைக் கவனித்துக் கொள்ள முடியுமா என அவர்கள் உதவி கேட்டுள்ளதாக ஹெலன் பெல் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ உதவிகளை தங்களால் செய்து கொள்ள முடியும் எனவும், ஆனால் உணவு ஊட்டுவது உட்பட அவரை கவனித்துக்கொள்ள ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக ஹெலன் பெல்லின் 87 வயதான தாயார் ராயல் ஜூபிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, அவரால் தற்போது தாமாகவே உணவை சாப்பிட முடியாத நிலை என்பதால், மருத்துவமனை ஊழியர்களின் உதவி அவருக்கு தேவை.

இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தை குறை கூற முடியாது என குறிப்பிட்டுள்ள ஹெலன் பெல், தற்போதுள்ள இக்கட்டான சூழலில் ஒன்றிணைந்து செயல்படுவது உண்மையில் செவிலியர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

இதனால், மருத்துவமனையின் கோரிக்கை தாம் ஏற்றுக்கொண்டதாகவும், தமது தாயாருக்கு உணவு வேளைகளில் உதவ முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.