நேற்று இரவு ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீப்பரவல் சம்பவித்துள்ளது.
Yonge street மற்றும் Finch Avenue பகுதிக்கு மேற்கே, அல்ராமவுண்ட் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நேற்று இரவு 9 மணியளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும், அந்த வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சம்பவ இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற படங்கள், அங்கே குறித்த அந்த வீட்டுப் பகுதியில் இருந்து பலத்த கரும்புகை வெளியேறியவாறு உள்ளதனைக் காட்டுகின்றன.
சம்பவ இடத்திலிருந்து சுமார் நான்கு மணி நேரங்களின் பின்னர் தகவல் வெளியிட்ட ரொரன்ரோ தீயணைப்பு படையினர், குறித்த அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு அங்கே தீயணைப்பு படையினரின் பிரசன்னம் இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலின் போது எவரும் காயமடைந்ததாக முறைப்பாடு இல்லை எனவும், சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.