Reading Time: < 1 minute

நேற்று முன்தினம் காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில், காவல்துறையால் சுடப்பட்ட ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Jane Street மற்றும் Falstaff Avenue பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை 3:53 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் காவல்துறையும் பொதுமக்களும் தொடர்பு பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து தகவல் வெளியிடுகையில், வீதியில் சென்ற காரில் இருந்தவரிடம் துப்பாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் காவல்துறையினருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த அந்த 29 வயது ஆணுடன் ஏற்பட்ட தகராற்றை அடுத்து, அந்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை கால்துறையினருக்கு ஏற்பட்டதாகவும், காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு குண்டு கார் மீது பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த நபர் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆறு விசாரணை அதிகாரிகளும், இரண்டு தடயவியல் நிபுணர்களும் புலனாய்வுப் பிரிவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்கின்றன.