நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார்.
பெல்ஜியம் – தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று இடம்பெற்ற நேட்டோ கூட்டணி அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றநிலையில் இருவருக்கும் இடையிலான இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது நேட்டோ கூட்டணிக்கு கனடாவின் உறுதியான ஆதரவையும், விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதில் நேட்டோவின் பங்கையும் பிரதமர் ட்ரூடோ மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் கொள்கையின் ஒரு அத்திவாரமாகவும் சர்வதேச ஸ்திரத்தன்மையின் மையத் தூணாகவும் நேட்டோ இருப்பதாக இதன்போது அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வது உட்பட பல்வேறு விடயங்களில் நட்பு நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று பிரதமரும் பொதுச்செயலாளரும் ஒப்புக்கொண்டனர்.
உக்ரைனின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான கனடாவின் ஆதரவை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், சீனாவின் சவால்களை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் ட்ரூடோ மற்றும் பொதுச்செயலாளர் ஸ்டோல்டென்பெர்க் ஆகியோர் பேசினர்.
காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நேட்டோவின் பணிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
உலகெங்கும் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநிறுத்த நேட்டோ அங்கத்துவ நாடுகள் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஆகியோர் எதிர்பார்ப்பு வெளியிட்டனர்.