Reading Time: < 1 minute

நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு கனடா ஆதரவாக இருக்குமென கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதை ஆதரிக்கிறீர்களா என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோவில் சேர விரும்பும் சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடந்து வருகின்றன, நிச்சயமாக கனடா, அதற்கு மிகவும் ஆதரவாக உள்ளது’ என கூறினார்.

கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாடுகளும் தற்காப்பு இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக மாற ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. தற்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இரு நாடுகளையும் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேரத் தூண்டியுள்ளது.

எதிர்வரும் ஜூன் 29- 30ஆம் திகதிகளில் ஸ்பெயினின் மட்ரிட்டில் நேட்டோவின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பின்லாந்தின் நாடாளுமன்றம் மே மாத இறுதியில் இதற்கான ஒரு முடிவை எடுக்கலாம்.

ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேருவதற்கு எதிராக ரஷ்யா இருநாடுகளையும் எச்சரித்துள்ளது. இது ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்காது என்றும், சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு இராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இதற்கு பதிலடி நடவடிக்கைகளுடன் ரஷ்யா பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளது.

நேட்டோவில் சேரப்போவதில்லை என்று உக்ரைன் உறுதியளிக்க மறுத்ததே படையெடுப்புக்கான ஒரு காரணம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 1,340 கிலோமீட்டர் நீண்ட எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்கிறது.