இறுதியுத்தக் காலப்பகுதிக்குப்பின்னர் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது.
அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு முகவரகத்தின் சொத்தாக மாறியது.
52 மீற்றர் நீளம் கொண்ட அந்த கப்பலை கொள்வனவு செய்வதற்கு யாரும் முன்வராததால், அதை உடைப்பதென கனடா அரசு தீர்மானத்தது.
ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அந்த கப்பலில் ஆஸ்பஸ்டாஸ் பாதரசம் உட்பட பல நச்சுப்பொருட்கள் இருப்பதாக சோதனை நடவடிக்கையொன்றின் போது கண்டறியப்பட்டது.
அத்துடன் அந்த கப்பலை பராமரித்து பாதுகாப்பதற்காக ஒட்டாவா நிர்வாகத்திற்கு சுமார் 970,000 டொலர்கள் செலவு ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூலை மாதம் 12ஆம் திகதி ஃபெடரல் அரசு அந்த கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.
அந்த கப்பல் கனேடிய சட்டங்களுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத வகையில் உடைக்கப்படலாம், மொத்தமாக ஒதுக்கப்படலாம் அல்லது மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நடவடிக்கையானாலும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் அது நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.