கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி விநியோகங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவது மற்றொரு கவலையாக உருவெடுத்துள்ளது.
நாட்டுக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட மொடர்னா தடுப்பூசி வருகை தாமதமடைந்துள்ளது. அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜோன்சன் & ஜோன்சனின் தடுப்பூசிகள் எத்தனை? எப்போது நாட்டுக்கு வரும் என்பது தொடர்பிலும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தடுப்பூசி முன்பதிவுகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில பிராந்தியங்கள் தடுப்பூசி போடும் பணிகளை இரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தாமதங்கள் இருந்தபோதிலும் ஜூன் மாதத்திற்குள் 44 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகள் முழுமையாகக் கிடைத்தால் ஜூலை-01 கனடா தினத்துக்கு முன்பதாக தடுப்பூசி பெற விரும்பும் அனைத்துக் கனேடியர்களும் முதல் தடுப்பூசியைக் பெற்றுக்கொள்ள முடியும் என அரசு எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி கனடா முழுவதும் மொத்தம் 9,200,859 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 22 வீதமான மக்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.