கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போன பெண் ஒருவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காணாமல் போன பெண்ணின் குடும்பத்தார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
Wanda Dubuc எனப்படும் அந்த 47 வயது பெண், கடந்த பத்தாம் திகதி பிற்பல் 5:30 அளவில் தனது வீட்டில் இருந்து வெளியேறி றிச்மண்ஹில் பகுதியில் உள்ள Essex Avenue மற்றும் Major Mackenzie Drive East பகுதிக்குச் சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக அவர் கறுப்பு – வெள்ளை நிற கோடுபோட்ட மேற்சட்டடையும், நீல ஜீன்சும், கறுப்பு காலணியும் அணிந்திருந்ததாகவும், கறுப்பு நிற கைப்பை ஒன்றினையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் அவர் தன்னுடன் வீட்டுத் திறப்பினையோ, கைத்தொலைபேசியையோ, பணப்பையையோ எடுத்துச் செல்லவில்லை எனவும், இதற்குமுன்னர் எப்போதும் அவர் இவ்வாறு காணாமல் போனதில்லை என்றும், அவரது நிலை குறித்து மிகுந்த கவலை கொள்வதாகவும், காணாமல்போன பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.
குறித்த அந்தப் பெண் கறுப்பு நிற கார் ஒன்றில் ஏறிச் சென்றதை அவதானித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ள நிலையில், அது குறித்த மேலதிக விபரங்களையும், காணொளிப் பதிவு ஆதாரங்களையும் எதிர்பார்த்துள்ள காவல்துறையினர். பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், வாடகை வண்டிகள், விருந்தினர் தங்கங்கள், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் போன்றவற்றில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.