Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகாவில் நகரக்கூடிய சொகுசு வீடுகளை கட்டித்தருவதாக கூறி பல ஆயிரம் டொலர்களை ஏமாற்றிய நபருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கையில், Little Creek Homes என்ற நிறுவனத்திடம் பணம் செலுத்திய நிலையில், வாக்குறுதி அளித்தது போன்று நகரக்கூடிய சொகுசு வீடுகள் கையளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மொத்த தொகையும் செலுத்தி ஏமாந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து துவக்கப்பட்ட விசாரணையில், ஒன்ராறியோ முழுவதும் வசிக்கும் பல பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் சிலர் $200,000 க்கும் அதிகமாக இழந்துள்ளனர் என்பதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், Little Creek Homes என்ற நிறுவனத்தின் உரிமையாளர் 58 வயதான பிலிப் பிராட்லி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்திடம் பணத்தை ஏமாந்த பலர் புகாரளிக்காமல் இருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், Little Creek Homes நிறுவனத்திடம் பணத்தை இழந்தவர்கள், உரிய ஆதாரங்களுடன் புகாரளிக்க முன்வர வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.