கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனடாவில் மது மற்றும் கஞ்சா பாவனை கடுமையாக அதிகரித்துள்ளதாக இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்ச் 2020 முதல் ஜூன் 2021 காலப்பகுதியில் மது எதிர்பார்த்த விற்பனையை விட சராசரியாக 5.5 வீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கஞ்சா விற்பனை மிகவும் செங்குத்தாக 25 வீத அதிகரிப்பை நெருங்கியுள்ளது.
புதிய ஆராய்ச்சியின் படி குறித்த காலப்பகுதியில் கனடாவில் 2.6 பில்லியன் கனடிய டொலருக்கு அதிகமாக மது மற்றும் கஞ்சா விற்பனை இடம்பெற்றுள்ளது.
ஹாமில்டன் – மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், சென். ஜோசப் ஹெல்த்கேர் ஹாமில்டன் மற்றும் தி ஹோம்வுட் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்ண இந்த ஆய்வுக் கட்டுரை JAMA Network மருத்துவ இதழில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கனடா புள்ளிவிபரத் துறையின் தரவுகளின் பிரகாரம் மார்ச் 2020 முதல் ஜூன் 2021 வரையான காலப்பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை கணிப்பிடப்பட்டது. பின்னர் இந்தத் தரவை முந்தைய 16 மாதங்களுடன் ஆய்வுக் குழு ஒப்பிட்டுப் பார்த்தது என்று மெக்மாஸ்டர் பீட்டர் போரிஸ் போதைப்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் ஜேம்ஸ் மேக்கிலோப் கூறினார்.
வழமையை விட தொற்று நோய் காலப்பகுதியில் மது விற்பனை 5.5 வீதம் அதிகரித்துள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய காலப்பகுதி சராசரி நுகர்வை விட 1.86 பில்லியன் டொலர் அதிகமான அளவுக்கு கனடியர்கள் மதுவை நுகர்ந்துள்ளனர். கஞ்சா விற்பனை எதிர்பார்த்த நுகர்வை விட 25 வீதம் அதிகமாக இருந்தது. அதாவது சராசரியை விட 811 மில்லியன் டொலர்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
தொற்றுநோயிலிருந்து நாம் வெளியே வரும்போது, போதைபொருள் பாவனையால் அதிகரித்த சிக்கல்களைச் சமாளிக்கத் திட்டமிட வேண்டும் என்பதையே ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது என போதைப்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் ஜேம்ஸ் மேக்கிலோப் தெரிவித்தார்.
அத்துடன், தொற்று நோய்க்கு மத்தியில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நடத்தை மாற்றங்களை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவா் கூட்டிக்காட்டினார்.
தொற்றுநோய் காலத்தில் மக்கள் அதிகளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், மன அழுத்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். போதைப் பொருள் பாவனை அதிகரிக்க இவை முக்கிய காரணிகளாக இருந்தன என ரொரண்டோ போதை மறுவாழ்வு மற்றும் மனநல மையத்தின் போதை மாறுவாழ்வு பிரிவு தலைவரான லெஸ்லி பக்லி தெரிவித்துள்ளார்.
இது ஒரு அபாய அறிகுறி. இதனை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுக் கடந்துவிட முடியாது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் கனடாவின் முடிவும் கஞ்சா அதிகளவு பாவனைக்கு வழிவகுத்திருக்கலாம் என மெக்மாஸ்டர் பீட்டர் போரிஸ் போதைப்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் ஜேம்ஸ் மேக்கிலோப் கூறினார்.