மெக்சிகோ நாட்டில் தேனிலவு சென்ற இடத்தில் கனேடிய பெண் ஒருவர் கணவரை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் Puerto Aventuras பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி தேனிலவை கொண்டாடி வந்துள்ளனர் கனடாவின் வின்னிபெக் பகுதியை சேர்ந்த Jesse மற்றும் Stacey Ropos தம்பதி.
சுமார் 9 நாட்கள் இவர்கல் அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், கனடா திரும்புவதற்கும் 12 மணி நேரம் முன்பு, அந்த ரிசார்ட் ஊழியர்களால் அந்த துயர சம்பவம் ஸ்டேசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ம் திகதி, அந்த ரிசார்ட்டில் இவர்களின் கடைசி நாள் இரவு, கணவருடன் சேர்ந்து அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார் ஸ்டேசி. இந்த நிலையில் தூக்கம் வருவதாக கூறி ஸ்டேசி தமது அறைக்கு செல்லவும், ஜெஸ்ஸி மது அருந்தியபடி இருந்துள்ளார்.
சுமார் 3 மணிக்கு ரிசார்ட் ஊழியர்களால் ஸ்டேசி எழுப்பப்பட, அவர்கள் மதுபான விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மதுபான விடுதியில் வைத்து பொலிசாரே நடந்த சம்பவத்தை ஸ்டேசியிடம் கூறியுள்ளனர்.
உள்ளூர் நபர்கள் இருவர் மற்றும் பாதுகாவலர்கள் இருவருடனும் ஜெஸ்ஸி சண்டையிட்டு கொண்டதாகவும், இதில் ஒருவர் ஜெஸ்ஸியை மூச்சுத்திணறடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் ஜெஸ்ஸி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 36 மற்றும் 34 வயதுடைய இருவரை பொலிசார் கைதும் செய்துள்ளனர்.
மேலும், திட்டமிட்டபடி ஸ்டேசி கனடா திரும்பியதாகவும், ஜெஸ்ஸியின் உடல் வியாழக்கிழமை மெக்சிகோ பொலிசாரால் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மட்டுமின்றி, மெக்சிகோவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.