Reading Time: < 1 minute

கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் துப்பாக்கி முனையில் செல்போன்களை களவாடிய நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஹமில்டனைச் சேர்ந்த 26 வயதான அன்ட்றூ பால்மர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இட்டாபிகொக்கின் குயின்ஸ்வே மற்றும் கிப்லிங் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள செல்போன் கடையொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகக் கவசம் மற்றும் கையுறை என்பனவற்றை அணிந்த குறித்த நபர் கடைக்குள் சென்று பணியாளர்களை மிரட்டி பல செல்போன்களை தனது பைக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

விரைந்து செயற்பட்ட கடை பணியாளர்கள் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த நபரினால் கொள்ளையிடப்பட்ட செல்போன்கள், கைக்துப்பாக்கி, கொள்ளையிட பயன்படுத்திய ஆடைகள் என்பனவற்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.