கனடாவில் கால்நடைப்பண்ணை நடத்திவந்த ஒருவர், பல பெண்களைக் கொன்று, தடயங்களை மறைத்ததுடன், சில பெண்களின் உடல்களை அரைத்து, இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துவந்துள்ளார்.
விதி வலியது என்பது போல, இந்த நபர் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அகால முடிவை சந்திக்க நேர்ந்தது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Port Coquitlam என்னுமிடத்தில் கால்நடைப் பண்ணை ஒன்றை வைத்திருந்த ராபர்ட் (Robert Pickton, 74) என்பவர் பன்றி இறைச்சியை அரைத்து விற்பனை செய்துவந்துள்ளார்.
ஒருமுறை ராபர்ட் பாலியல் தொழில் செய்யும் Stitch என்னும் பெண்ணை தன் பண்ணைக்கு அழைத்துச் செல்ல, அந்த இடம் ஆபத்தான இடம் என்பதை உணர்ந்துகொண்ட Stitch, அங்கிருந்து தப்பிச் செல்ல முயல, அவரைக் கத்தியால் குத்தியுள்ளார் ராபர்ட்.
என்றாலும் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோட, கத்தியால் குத்தப்பட்டு உடலில் இரத்தம் வடிய, ஒட்டுத்துணியின்றி நடுங்கிக்கொண்டிருந்த Stitchஐ வழியில் ஒருவர் கண்டு மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Stitch புகாரளித்தும், அவர் போதைப்பொருள் எடுப்பவர் என்பதால், பொலிசார் அந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், அவர்கள் செய்த அந்தத் தவறு, சுமார் 33 பெண்களின் உயிரை பலிவாங்கியுள்ளது. 1997 முதல் தொடர்ந்து ஆதரவற்ற பல அப்பாவிப்பெண்களை தன் பண்ணைக்கு அழைத்து வந்து வன்புணர்ந்து கொலை செய்துள்ளார் ராபர்ட். அத்துடன், அவர்களில் சிலருடைய உடல்களை அரைத்து, தான் விற்றுவந்த இறைச்சியுடன் கலந்து விற்றுள்ளார் அவர்.
அவர் பெண்களை எப்படி சித்திரவதை செய்து கொலை செய்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாது, அதை விவரித்தாலும் இளகிய மனதுடையோரை அது அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
இத்தனை பெண்களைக் கொன்றும், ராபர்ட்டின் பண்ணையை சோதனையிட பொலிசாருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர், ராபர்ட் விலங்குகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்வதாக தகவல் கிடைக்க, அவரது பண்ணையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக ஒருவர் கூற, வாரண்ட் பெற்று பொலிசார் அந்தப் பண்ணைக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பண்ணை முழுவதும் ஆங்காங்கே பெண்களின் தலைகள், கைகள், கால்கள், மண்டை ஓடுகள், எலும்புகள் என சிதறிக்கிடந்துள்ளன.
விடயம் என்னவென்றால், சுமார் 33 பெண்கள் கொல்லப்பட்டதாக பொலிசார் கருதும் நிலையில், ஒரு உடல்கூட முழுமையாக கிடைக்கவில்லையாம். உண்மையில், தான் 49 பெண்களைக் கொன்றதாகவும், 50 பெண்களைக் கொல்லமுடியவில்லையே என கோபத்திலிருப்பதகாவும், மாறுவேடத்திலிருந்த ஒர் பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார் ராபர்ட்.
இத்தனை பெண்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றும், கைது செய்யப்பட்ட ராபர்ட் 17 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருந்தார்.
விதி வலியதாயிற்றே, மே மாதம், ராபர்ட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதி அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கியூபெக்கிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராபர்ட் சிகிச்சை பலனின்றி காயங்கள் காரணமாக மே மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
என்றாலும், அவர் உயிரிழந்ததால், அவரால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என ஏமாற்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.