Reading Time: < 1 minute

கனடாவில் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்களிப்புச் செய்துவரும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பட்டதாரிகள் 90,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்கும் நடவடிக்கைகளை ஓட்டாவா விரைவுபடுத்தியுள்ளது.

கனடாவில் தற்போதுள்ள 50,000 அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் 40,000 வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டதாரிகள் புதிய கொள்கையின் கீழ் பயனடைவார்கள் என கனேடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோ நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

கனடாவின் செழிப்புக்கான பாதை குடியேற்றங்களில் தங்கியுள்ளது. கனேடிய பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு துறைகளில் புலம்பெயர்ந்தவர்கள் அதிக பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர் எனவும் அவா் குறிப்பிட்டார்.

சுகாதார பராமரிப்பு மற்றும் பிற அத்தியாவசிய தொழில் துறைகளில் ஒரு வருட கால பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கனடாவில் நான்கு ஆண்டுகள் பட்டக் கல்வியைப் பூா்த்தி செய்த பட்டதாரிகள் புதிய கொள்கையின் கீழ் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து மே 6 ஆம் திகதி முதல் நிரந்தர வதிவிட அனுமதிக்கான விண்ணப்பங்களை குடிவரவுத் துறை ஏற்கத் தொடங்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.