Reading Time: < 1 minute

தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு பொலிஸ் சான்றிதழ்கள் தேவை என நான் சொல்லவேயில்லை என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் அமைச்சர்.

கனடாவில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் கனடா பிரதமர் வெளிப்படையாக இந்தியாவை விமர்சிக்க, இரு நாடுகளுக்கிமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்திய மாணவர்களைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை எடுத்தது கனடா அரசு.

இந்திய மாணவர்கள் என்று மட்டும் சொன்னால் அது பிரச்சினையாகலாம் என்பதற்காக, மொத்த சர்வதேச மாணவர்களும் குறிவைக்கப்பட்டார்கள், இதை உலகமே அறியும்.

இம்மாதம், அதாவது, மே மாதம் 6ஆம் திகதி, மாணவர்களின் விசா விண்ணப்பங்களை விலாவாரியாக சோதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார் மார்க் மில்லர். அவர்களை சோதிப்போம், அவர்களுக்கு குற்றப் பின்னணி இருந்தால், அவர்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என்று கூறியிருந்தார் அவர்.

இந்நிலையில், இந்திய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான Arpan Khanna, திங்கட்கிழமையன்று, நாடாளுமன்ற குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் நிலைக்குழு முன் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்த மார்க் மில்லர், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு பொலிஸ் சான்றிதழ் தேவை என நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

ஆக, சர்வதேச மாணவர்கள் உட்பட, தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு பொலிஸ் சான்றிதழ் தேவையில்லை என கனடா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அரசு கைரேகை போன்ற அடையாளங்களை சோதிப்பதுண்டு என்று கூறிய மில்லர், ஆனால், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வழக்கமாக பொலிஸ் சான்றிதழ் தேவையில்லை என்றார். சில அதிகாரிகள், பாதுகாப்பு சோதனையின்போது பொலிஸ் சான்றிதழ் தேவை என கருதும் பட்சத்தில் மட்டுமே அவை தேவைப்படலாம் என்று கூறியுள்ளார் அவர்.