கனடாவில் இணையவழி நேரலை வழியில் இடம்பெற்ற தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொற்று நோய்க்கு மத்தியில் தமிழ் கனேடிய முன்களப் பணியாளர்களர் ஆற்றிவரும் பங்களுப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஏற்பாட்டில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இணையவழியில் நேரலை ஊடாக இணைந்துகொண்டு தமிழ் கனேடிய முன்களப் பணியாளர்களுடன் பிரதமர் ட்ரூடோ கலந்துரையாடினார்.
வணக்கம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் கூறி பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது உரையை ஆரம்பித்தார்.
இதேவேளை, இந்த உரையின்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது கண்டனத்தை வெளியிட்டார்.
இணைய வழி நேரலையில் நடைபெற்ற பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த, ரொரண்டோ நகர முதல்வர் ஜோன் ரொரி ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.
அத்துடன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.