ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்பட்ட தமிழ் ஆய்வாளர் சிவபாலசுப்ரமணி காலமானார். அவருக்கு வயது 60.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. குமரி கண்டம், லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார்.
திருச்சி உறையூரில் பிறந்தவர் சிவ பாலசுப்ரமணியன். கடலியலில் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை இவர் மேற்கொண்டுவந்தார். இவர் தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.
குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இவரது மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.