தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது.
அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.
மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையைச் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் நுழைவுச்சீட்டு விற்பனை முகவர் நிலையம் யாழ் மருத்துவமனை வீதியில் அமையவுள்ளதுடன், இணையத்திலும் நுழைவுச்சீட்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.