Reading Time: < 1 minute

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது போல, தன்னை தொடர்ந்து அவமதித்துவரும் அமெரிக்காவுக்கு சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும் கூறி கேலி செய்த ட்ரம்ப், பொருளாதாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க இருப்பதாக மிரட்டியுள்ளார்.ட்ரம்பின் புது நண்பரான எலான் மஸ்கோ, ட்ரூடோவைப் பெண் என்றும், அவர் தற்போது கனடாவின் ஆளுநர் பதவியிலும் இல்லை என்றும் கூறி அவமதித்தார்.

ஆனாலும், கனடாவுக்கு ஏற்ற நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளார் ட்ரூடோ.

ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் Ventura County ஆகிய இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து கட்டிடங்களை கபளீகரம் செய்துவருகிறது.

சுமார் 140,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நேரத்தில், ட்ரூடோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘அயலகத்தாருக்கு உதவும் அயலகத்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், விமானம் ஒன்று தீயை அணைக்க தண்ணீரைக் கொட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதாவது, கனேடிய விமானம் ஒன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் வீடியோ அது.

அத்துடன், கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும், குறிப்பாக தங்கள் இன்னுயிரை இழந்தவர்களையும் கனடா நினைவுகூர்கிறது என்று கூறியுள்ள ட்ரூடோ, நாங்களும் காட்டுத்தீயின் சவால்களை எதிர்கொண்டவர்கள்தான், அந்த நேரத்தில், கலிபோர்னியா எங்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியது என்றும் கூறியுள்ளார்.

மேலும், கனேடிய தீயணைப்பு விமானங்கள் ஏற்கனவே கலிபோர்னியாவில் தீயணைக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளன, எங்கள் அமெரிக்க அயலகத்தார்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ட்ரூடோ.

Comments are closed, but trackbacks and pingbacks are open.