தனிப்பட்டவர்களின் நிதியுதவி மூலம் அகதிகளை மீளக்குடியமர்த்தும் வெற்றிகரமான திட்டத்துடன் கனடா ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறது என்று குடிவரவுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.சி.ஆர்) மற்றும் சுவிட்சர்லாந்து அரசினால் ஜெனீவாவில் நடத்தப்பட்ட உலக அகதிகள் மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே மென்டிசினோ இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், அகதிகளுக்கான சட்டவல்லுனர்கள் மற்றும் அகதிகளின் குழுத் தலைவர்களை ஒன்றிணைக்கும். உலகளாவிய இடம்பெயர்வு நெருக்கடியைப் பற்றி ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்க்கோ மென்டிசினோ கடந்த நொவம்பர் 20 ஆம் திகதி குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கனடா தனது “அனுபவத்தின் ஆழத்தை” தனியார் அணுசரணைத் திட்டத்தில் பகிர்ந்து கொள்கிறது, இது மோதல், பேரழிவு அல்லது துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிய 320,000 புதியவர்களை வெற்றிகரமாக நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“அந்த செயல்முறைகளைச் செம்மைப்படுத்துவதன் மூலம், அவற்றை இன்னும் வலுவானதாக மாற்றுவதன் மூலம், அந்த அனுபவங்களை மற்றைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.