Reading Time: < 1 minute

எல்லைகளை மீண்டும் திறந்து சர்வதேச பயணிகளை வரவேற்க கனடா தயாராகி வரும் நிலையில் ரொரண்டோ – பியர்சன் விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியன தடுப்பூசி நிலையின் அடிப்படையில் பயணிகளுக்கான தனித்தனி வரிசைகளை செயற்படுத்த தயாராகி வருகின்றன.

முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் பயணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நடவடிக்கை தடுப்பூசிகளை விரைவாகப் பெற ஊக்குவிப்பதாக அமையும் என அரசாங்கம் கருதுகிறது.

விமான நிலையங்களில் அமுல் செய்யப்படும் இந்தத் தனி வரிசைக் கொள்கை முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற அனுமதிக்கும் என சாஸ்கடூனை தளமாகக் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் ஹசன் மஸ்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் ஆபத்துள்ள ஏனையவர்களுடன் தொடர்புகொள்வதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கும் எனவும் அவா் கூறினார்.

“இது ஒரு சிறந்த யோசனையாகும். அத்துடன், தடுப்பூசி போட இந்நடவடிக்கை அனைவரையும் ஊக்குவிக்கும்” என மஸ்ரி குறிப்பிட்டார்.

புதிய கட்டுப்பாடு தளர்வு நடவடிக்கையின் மூலம் இரண்டு தடுப்பூசிகளையும் போட்ட கனேடியர்கள் மற்றும் கனடாவுக்குத் திரும்பும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தல் நீக்கப்படுகிறது.

எனினும் ஒரு தடுப்பூசியைப் பெற்ற அல்லது தடுப்பூசி பெறதாவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறை தொடர்ந்து அமுலில் இருக்கும். இதே கொள்கைகள் ஆகஸ்ட் 9 முதல் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும்.

விமான நிலையங்களின் தனி வரிசைத் திட்டம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இந்தத் திட்டம் கனேடியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ரொராண்டோவைச் சேர்ந்த அவசர மருத்துவர் டாக்டர் காஷிஃப் பிர்சாடா தெரிவித்துள்ளார்.

“அல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்களில் தொற்றாளர்கள் அதிகரிக்கும் நிலையில் தொற்றுநோயை சிறப்பாக கையாளும் பிற மாகாணங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த நடைமுறை உதவும்” எனவும் அவர் கூறினார்.

எனினும் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தத் தனி வரிசைத் திட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.