Reading Time: < 1 minute

கனடாவில் 2021க்கு பின்னர் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2.7 மில்லியன் டொலர் தொகையை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, தீவிரமாக மற்றும் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட 50 பேர்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜூன் முதல் 2022 டிசம்பர் 1 வரையில் இழப்பீடு கோரி 1,299 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 209 பேர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

221 பேர்களின் கோரிக்கை முழுமையாக ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், 48 கோரிக்கைகள் மருத்துவ மறுஆய்வு வாரிய மதிப்பீடு நிலுவையில் உள்ளது எனவும் எஞ்சியுள்ள 662 கோரிக்கைகளின் மருத்துவ தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசியால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு அளிக்கும் திட்டமானது 2020 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, 2021 ஜூன் மாதம் முதல் மனுக்கள் பெறப்பட்டது. இதில், 2020 டிசம்பர் 8ம் திகதிக்கு பின்னர் கனடாவில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்பை எதிர்கொண்டவர்கள் இழப்பீடு கோர முடியும்.

அனைத்து தடுப்பூசிகளுக்கும் இந்த திட்டத்தில் இழப்பீடு கோரலாம், ஆனால் கொரோனா தடுப்பூசி உட்பட எந்த தடுப்பூசிகளுக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 10,000 பேர்களில் ஒருவருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கனடாவில் 93 மில்லியன் டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டதில், 10,300 பேர்களுக்கு மட்டுமே தீவிர பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.