Reading Time: < 1 minute

கனடாவில் ஒமிக்ரோன் திரிபு பரவல் தீவிரமடைந்து தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பதுடன், மருத்துவமனைகளும் நிரம்பிவரும் நிலையில் இனியும் தாமதிக்காது தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களை வலியுறுத்தியுள்ளார்.

சரியானதைச் செய்ய ஒருபோதும் ஒருபோதும் தாமதிக்காதீர்கள். உங்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள இனினும் தாமதிக்க வேண்டாம் எனவும் பிரதமர் ட்ரூடோ கேட்டுக்கொண்டார்.

கனடா முழுவதும் ஒமிக்ரோன் திரிபு பரவலால் தொற்று நோயாளர் தொகை சடுதியாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி போடாதவர்கள் தொடர்பில் கனேடியர்கள் கோபமடைந்துள்ளனர். அவா்களின் விரக்தியை புரிந்துகொள்ள முடிகிறது எனவும் ட்ரூடோ கூறினார்.

தடுப்பூசி போடாதவர்கள் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டி ஏற்படுகிறது. மருத்துவமனைகள் மிக வேகமாக நிரம்புகின்றன. இதனால் புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் முக்கிய அறுவைச் சிகிச்சைகளை தள்ளிப் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு 140 மில்லியன் அதிவிரைவு கொவிட் பரிசோதனை கருவிகளை விரைவில் மத்திய அரசு அனுப்பிவைக்கும் என பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டார். இது கடந்த டிசம்பரில் மாகாணங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுப்பிய 35 மில்லியன் கொவிட் பரிசோதனை கருவிகளை விட நான்கு மடங்கு அதிகமான தொகையாகும்.

தொற்று நோய் நெருக்கடியால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் விரக்தியடைந்துள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாடசாலைகளைத் திறக்க முடியாமல் மீண்டும் மாணவா்கள் மெய்நிகர் வகுப்புக்களுக்குத் திரும்புகின்றனர். மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன. தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேறு வழி இல்லை. எனவே, இவற்றைத் தவிர்க்க முடியாது எனவும் கனடியப் பிரதமர் கூறினார்.

ஒமிக்ரோன் போன்ற அலைகள் தாக்கும்போது நாம் பதுங்கிக்கொண்டே எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். கனடியர்கள் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்படும்போதுதான் நெருக்கடியைத் தணிக்க முடியும் எனவும் அவா் தெரிவித்தார்.

நாட்டில் அனைவருக்கும் போடுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, தடுப்பூசி போடத் தயங்க வேண்டாம். இதுவரை ஒரு தடுப்பூசியையும் போடாதவர்கள் விரைவில் உங்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனையோர் உங்கள் தடுப்பூசி நிலைகளுக்கு ஏற்ப ஏனைய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பொது வெளியில் கட்டாயம் முககவசங்களை அணிந்துகொள்ளுங்கள். நோய்வாய்ப்பட்டிருந்தால் வீடுகளிலேயே இருங்கள் எனவும் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தினார்.

நாங்கள் அனைவரும் எங்கள் பங்கைச் சரியாகச் செய்தால் வசந்த காலத்தை நோக்கி விரைவாக நகர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.