டோரியன் புயலில் சிக்கி உயிரிழந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது.
பஹாமாஸ் தீவுகளில் புயலும் கன மழையும் தாக்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் என அலிஷியா சப்ரினா லியோலி (வயது-27) என்ற இளம் பெண் பல்வேறு இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வந்தார்.
கனேடியரான லியோலி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்துவந்த நிலையில் கடந்த செப்டம்பர் முதல் திகதி பஹாமாஸ் தீவுகளை புரட்டிப்போட்ட டோரியன் புயலில் சிக்கி உயிரிழந்தார்.
தமது மகள் மற்றும் மருமகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என லியோலியின் தாயார் ஜோசி மெக்டோனா கண்ணீருடன் தெரிவித்திருந்தார். தற்போது லியோலியின் கணவரே இந்த அதிர்ச்சித் தகவலை தமது உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து கனேடிய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட மெக்டோனா மேலதிக தகவல்களுக்காக மூன்று நாட்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
டொரியன் புயலில் சிக்கி இதுவரை பஹாமாஸில் 50 பேர் உயிரிரந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த புயல் கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்ஷியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரை தாக்கியதில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.