Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டொமினிக் குடியரசில் நிர்க்கதியாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ப்ளையர் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் ஊடாக பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவிற்கு திரும்பவிருந்த குறித்த ப்ளையர் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சீரற்ற கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் தாம் நிர்க்கதியாக நேரிட்டதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

டேனி திரின்கா என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். திரின்கா மற்றும் அவரது கணவர் மற்றும் அவரது மகள் ஆகியோர் டொமினிக் குடியரசின் Punta Cana என்னும் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததனை முன்னிட்டு இந்த சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இது ஏழு நாள் சுற்றுலா பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் நாடு திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்தபோது விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாவும் இதனால் தாங்கள் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் நிலவிய புயல் காற்று நிலைமையினால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பிளயர் விமான சேவையின் விமான பணிப்பெண்ணாக கடமை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் ரத்து செய்யப்பட்டதன் பின்னர் சில நாட்களின் பின்னரே அடுத்த விமான சேவை சேவையில் ஈடுபடுத்தப்படும் என கூறப்பட்டதாகவும் இதனால் அவர்கள் வேறும் விமானங்களை பயன்படுத்தி நாடு திரும்பியதாகவும் மூன்று நாட்கள் மேலதிகமாக தங்கியிருந்தமைக்கான மேலதிக செலவுகளை விமான சேவை நிறுவனம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்தனர்.

தான் கடமையாற்றிய காலத்தில் விமான சேவை நிறுவனம் தொடர்பில் பெருமிதத்துடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் விமான சேவை நிறுவனம் வாடிக்கையாளர்களை உரிய முறையில் கவனிக்க தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயணிகளின் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டு மீள் பதிவு செய்வது ஓர் சிரமமான செயல்முறை என ப்ளையர் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.