டொமினிகன் குடியரசு விமான நிலையத்தில் கனேடிய இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பான செய்தி ஒன்று கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
டொமினிக்கன் குடியரசு என்னும் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த கனேடிய இளம்பெண் ஒருவர், வாழ்வில் மறக்கமுடியாத வகையில் அவமதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Burlingtonஐச் சேர்ந்த நடாஷா (Natasha Marques, 23), தனது தோழி ஒருவருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஒரு வாரம் மகிழ்ச்சியாக கடந்த நிலையில், மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நடாஷாவுக்கு, தனக்கு பெருத்த அவமதிப்பு ஒன்று காத்திருப்பது தெரியாது.
தனது உடைமைகளை பாதுகாப்பு சோதனைக்காக அனுப்பிவிட்டு வரிசையில் நின்ற நடாஷாவின் முறைவந்தபோது, அவரை சட்டையைக் கழற்றச் சொல்லியிருக்கிறார் ஒரு பாதுகாப்பு அதிகாரி.
ஸ்வெட்டர் போன்ற ஒரு சட்டை மட்டுமே அணிந்திருந்த நடாஷா, அன்றைக்குப் பார்த்து உள்ளாடை எதுவும் அணியாமல் இருந்திருக்கிறார். அந்த பாதுகாப்பு அதிகாரியிடம் தன் நிலையை நடாஷா விளக்கியும் அந்த நபர் அவரது கெஞ்சலுக்கு கொஞ்சமும் செவிசாய்க்க மறுத்துவிட்டாராம்.
இனியும் சட்டையைக் கழற்ற மறுத்தால், இந்த ஆட்கள் தன்னை கைது செய்யக்கூடும் என அஞ்சிய நடாஷா, வேறு வழியின்றி அத்தனை பேர் மத்தியில் சட்டையைக் கழற்றி, தன் மார்பைக் கையால் மறைத்தபடி, வெட்கத்துடன் தலைகுனிந்தபடி, பாதுகாப்புக் கருவியின் ஊடாக நடந்துசென்றிருக்கிறார்.
சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டு அவமானத்துடன் வீடு திரும்பிய நடாஷா, இந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், பலரும் நடாஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த அவமானம் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று கூறும் நடாஷா, தயவு செய்து சுற்றுலா சென்றாலும் சரி, எங்கு சென்றாலும் சரி, உள்ளாடைகளை அணியத் தவறவேண்டாம் என எச்சரிக்கிறார்.