Reading Time: < 1 minute

ஜோன்சன் & ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசியின் முதல் தொகுதி கனடா வந்துள்ளது. 3 இலட்சம் தடுப்பூசிகள் நேற்று நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளதை கனேடிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மத்திய அரசாங்கம் வெளியிடவில்லை.

ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மிகக் குறைந்த அளவு தடுப்பூசிகளையே இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் 10 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் 28 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

கனடாவில் ஏற்கனவே 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி தொடர்பான வழிகாட்டல்களை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இதுவரை வழங்கவில்லை.

இதேவேளை, இந்த வாரம் பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மொடர்னாவின் சுமார் 650,000 தடுப்பூசிகளும் கனடாவுக்கு வரும் பாதையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.