ஜோன்சன்& ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட நான்காவது கோவிட்19 தடுப்பூசியாக இது அமைந்துள்ளது.
பைசர்-பயோஎன்டென், மொடர்னா, அஸ்ட்ராஜெனேகோ தடுப்பூசிகளைத் தொடர்ந்து நான்காவது தடுப்பூசியாக ஜோன்சன்& ஜோன்சன் தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா சர்மா நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கனடாவில் இதுவரை நான்கு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக தடுப்பூசிகள் நாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி இந்த வாரத்தில் மட்டும் 4 இலட்சம் கனேடியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் இன்றும் சில இலட்சம் கனேடியர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து வெளியிட்டார்.
கூடிய விரைவில் மேலும் பல மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்தில் இன்னும் அதிகமான தடுப்பூசிகளை நாங்கள் பெற முடியும். அனைத்து கனேடியர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் எனவும் ட்ரூடோ கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை கனடாவில் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் போலவே சாதாரண குளிரூட்டிகளில் வைத்து ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைப் பேண முடியும் என்பதால் இது பயன்பாட்டுக்கு இலகுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி .1.351 புதிய பிறழ்வு, பிரேசிலில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி.1 பிறழ்வு கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கு எதிராக ஜோன்சன்&ஜோன்சன் தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிப்பதாக கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோன்சன்&ஜோன்சன் 38 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பாதையில் கனடா உள்ளது. குறைந்தது 10 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெடுத்திடப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 28 மில்லியனை அதிகமாக வாங்குவதற்கான விருப்பத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜோன்சன்& ஜோன்சன் கனேடிய தலைவர் ஜோர்ஜ் பார்டோலோவுடன் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பேசினார்.
இதன்போது செப்டம்பர் இறுதிக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்கும் திட்டத்தை ஜோர்ஜ் பார்டோலோ உறுதி செய்ததாக ட்ரூடோ கூறினார்.