Reading Time: < 1 minute

கனடாவில் இவ்வருடம் ஜூன் மாத இறுதிக்குள் குறைந்தது 14.5 மில்லியன் கனேடியர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா கோவிட்19 தடுப்பூசிகளைப் போட முடியும் என எதிர்பார்ப்பதாக தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்..

கோவிட்19 தடுப்பூசித் திட்டங்கள் தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை நேற்று கனடா மத்திய அரசு வெளியிட்டது. இந்த உத்தேச அட்டவணையை வெளியிட்டு கருத்து வெளியிடும்போதே டேனி ஃபோர்டின் இவ்வாறு கூறினார்.

தற்போது கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒருவருக்கு இரண்டு சொட்டுக்கள் என்ற அடிப்படையில் போடப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனெகா, ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் நோவாவக்ஸ் தடுப்பூசிகளுக்கு ஹெல்த் கனடா அங்கீகாரம் வழங்கினால் ஜூன் இறுதிக்குள் 24.5 மில்லியன் கனேடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும் என அரசாங்கத்தின் புதிய உத்தேச தடுப்பூசி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.