கனடாவின் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் (WestJet Airlines) ஜனவரியில் அதன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் 15 வீதத்தை இரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
வேகமாகக் பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக தனது பணியாளர்களை முழுமையாகப் பணிக்கமர்த்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த கொரோனா பரவல் மற்றும் கடும் குளிர் காரணமாக ஏற்கனவே பல விமான சேவைகளை அல்பர்ட்டாவின் கல்கரியை தலைமையிடமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான வெஸ்ட்ஜெட் இரத்துச் செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொவிட்-19 காரணமாக 181 வெஸ்ட்ஜெட் ஊழியர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் பெல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட்ஜெட் ஒரு நாளைக்கு 450 விமானங்களை இயக்குகிறது. இந்நிலையில் ஜனவரியில் கிட்டத்தட்ட 68 விமானங்களை அந்நிறுவனம் இரத்துச் செய்யவுள்ளது. அத்துடன், கடும் குளிரான காலநிலை காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளில் மேலும் பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் வெஸ்ட்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏர்-கனடா கடந்த வாரத்தில் ஏறக்குறைய 4% விமானங்களை இரத்து செய்தது. எனினும் தொற்று நோயால் ஏற்பட்ட நெருக்கடியை விட பாதகமான கடும் குளிருடனான காலநிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.