Reading Time: 2 minutes

டெல்லி: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. இதில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 900 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணிக்கவே விரும்புகின்றனர். இருப்பினும், இந்தியாவில் இருக்கும் ரயில்கள் தொழில்நுட்ப ரீதியாக டெவலப் ஆகவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த புகார்களைச் சரி செய்ய ரயில்வே துறை தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகளை போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகிறது.

இதற்கிடையே கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயில் ஆகும்.

முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதால் கோரமண்டல் விரைவு ரயிலில் சுமார் 7 பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது..

மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதலில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஒடிசாவில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் இது குறித்துக் கூறுகையில், “மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.. மீட்புப் பணிகளில் எந்தவொரு உதவியையும் செய்ய மாநில அரசு தயாராகவே உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிய நிலையில் பல பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கியதால் பெரும் விபத்தாக இது மாறியது. இரவு நேரம் என்பதால் கிராமப் பகுதி என்பதாலும் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கொடூர விபத்தில் இதுவரை 207 உடல்களை மீட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 900ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அங்கே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏசி பெட்டிகளில் பயணித்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 15 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் முடியவில்லை. மீட்பு தொடரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.