போலியான கல்லூரி சேர்க்கை தொடர்பில் ஏமாற்றப்பட்ட 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் சுமூக தீர்வு உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் வழக்குகள் தீர்க்கப்படும் போது மாணவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்பது தொடர்பில் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெளிவு படுத்தவில்லை.
கல்லூரி சேர்க்கை தொடர்பான போலியன கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு தீர்வுக்காக தாங்கள் தீவிரமாக முயன்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச மாணவர்கள் விவகாரத்தில் எவரேனும் ஆதாயம் பெற முயன்றிருந்தால், உண்மையில் அவர்கள் அதற்கான விலையை அளிக்க வேண்டியிருக்கும் என்றார்.
2017 மற்றும் 2018ல் மாணவர்கள் விசாவில் கனடா வந்தவர்கள் வெளியேற்றப்படும் ஆணையை எதிர்கொள்வதாக அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் ஜலந்தர் பகுதியை சேர்ந்த Brijesh Mishra என்பவரே போலியான கல்லூரி சேர்க்கை கடிதங்களை தயார் செய்தவர் என்பதையும் அந்த செய்தி குறிப்பில் பதிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, அந்த மாணவர்கள் கனடாவுக்கு வந்து சேர்ந்த பின்னர், Brijesh Mishra தலைமையிலான நிறுவனம், மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் குறிப்பிட்ட கல்லூரியில் பதிவு செய்ய முடியாது என மறுத்துள்ளது.
அத்துடன் கல்லூரியை மாற்றிக்கொள்ளவும் மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் ஐந்து அல்லது 6 ஆண்டுகளில் படிப்பையும் முடித்துள்ளனர். ஆனால் நிரந்தர வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையிலேயே அவர்களுக்கு தாங்கள் போலியான கல்லூரி சேர்க்கை கடிதத்தால் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு கண்டிப்பாக எடுக்கப்படும் என்றே அமைச்சர் Sean Fraser உறுதிபட தெரிவிக்கிறார்.