Reading Time: < 1 minute

சீனாவுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியில் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எனினும் கனடாவின்  நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மொன்றியலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இரு கனேடியப் பிரஜைகளைக் கைது செய்து சீனா தடுத்து வைத்துள்ளது. அத்துடன் கனோலா எண்ணெய் வித்துக்கள் மற்றும் விலங்குணவுகளை கனடாவில் இருந்து இறக்குமதி செய்வதையும் அந்நாடு நிறுத்தியுள்ளது.

சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவியின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் வான்கூவர் பொலிஸாரால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரைக் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச அளவில் அபரிமிதமான வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. அதனை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் தவறு செய்யாதீர்கள். நாங்கள் எப்போதும் கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் கனேடிய நலன்களுக்கே முன்னுரிமை அளிப்போம்.

சீனாவும் கனடாவும் நேரடியாகவும் வெற்றிகரமாகவும் பல விடயங்களைக் கையாண்ட நீண்ட வரலாறு உள்ளது. நாங்கள் சீனாவுடன் முரண்பட விரும்பவில்லை. எனினும் எமது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை” என பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.