Reading Time: < 1 minute

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அந்நாட்டுடன் உறவுகளை பேணுவதில் தொடர்ந்து கனடா எச்சரிக்கையாகவே இருக்கும் என கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிடியாணை உத்தரவின் கீழ் கனடாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சீனா – குவாவி தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவால் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பாவர் ஆகிய இரண்டு கனேடிய பிரஜைகளும் சீனாவால் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சீனாவுடனான கனேடிய உறவுகள் தொடர்ந்து எச்சரிக்கையுடனேயே இருக்கும் என கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

சீனாவுடன் சகவாழ்வு,போட்டி, ஒத்துழைப்பு மற்றும் சவால் என நான்கு வேறு அணுகுமுறைகளை கனடா பின்பற்றுகிறது.

சீனாவுடன் வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது போன்ற விடயங்களில் கனடா ஒத்துழைத்துச் செயற்படும். அதே நேரத்தில் கடந்த காலத்தில் ஒட்டாவா செய்தது போல் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் ஒடுக்குமுறை திபெத்தியர்கள் மற்றும் ஹொங்கொங் தொடர்பான சீனாவின் அணுகுமுறைகள் விடயத்தில் அந்நாட்டுடனான உறவுகள் சவாலானதாகவே இருக்கும் எனவும் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

இரண்டு கனேடியப் பிரஜைகளும் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வரை சீனா – கனடா உறுவுகள் மேம்படுவதற்கான வழிகள் இருக்கவில்லை. ஆனால் தற்போது சிறய முன்னேற்றம் உள்ளது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது தோ்தலில் வெற்றிபெற்ற பின்னர் கடந்த திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட கனேடிய பிரதமர் ஜஜ்ரின் ட்ரூடோ, 1970 முதல் சீனாவுடனான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்புவதில் தனது தந்தை ஈட்டிய வெற்றியை தொடர்ந்து பேணுவதாக உறுதியளித்தார்.

ஆனால் மெங் கைது செய்யப்படுவதற்கு முன்பே சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கனடா கேள்வி எழுப்பி வந்தது பீஜிங்கை எரிச்சலடையச் செய்தது. இதனால் இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் இருந்தது.

மெங் கைதைத் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாகவே இரண்டு கனேடியர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் மெங் கைதுக்கும் இரு கனேடியர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் இரு கனேடியர்களின் கைதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.