கனடாவில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறைச்சி என்பவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள ருவிட்டர் குறிப்பில் “கனேடிய பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சிமிக்க செய்தி” என்று தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் மற்றும் ஒட்டாவாவுக்கு இடையிலான வர்த்தக முறுகல்களுக்கு ஏதுவான காரணிகள் ஆராயப்பட்ட நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதமர் தனது ருவிட்டர் பதிவில் “எங்கள் இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்த முக்கியமான சந்தையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டமைக்காக தூதுவர் டொமினிக் பார்டன் மற்றும் கனேடிய இறைச்சித் தொழிற்துறைக்கு நன்றி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் இறைச்சி ஏற்றுமதி துறைக்கான மிகப்பாரிய சந்தையாக சீன விளங்குகின்றது. ஒரு தொகுதி பன்றி இறைச்சி உற்பத்திப் பொருட்களில் தடைசெய்யப்பட்ட சேர்க்கையான ரெக்டோபமைனின் எச்சத்தை சீன சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் கனேடிய ஏற்றுமதி பொருட்கள் நிறுத்தப்பட்டன.