சீனாவில் சுமார் 3 ஆண்டுகளாக தடுப்புக் காலலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியப் பிரஜைகளும் விடுவிக்கப்பட்ட நிலையில் அவா்கள் பாதுகாப்பாக கனடாவை அடைந்தனர்.
சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மைக்கேல் ஸ்பாவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகிய இருவரும் கனேடிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை கால்கேரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
கனடா வந்து சேர்ந்த இருவரையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்டியணைத்து வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கோவ்ரிக் சனிக்கிழமை பிற்பகல் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை அவரது சகோதரி மற்றும் மனைவி ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் ஊடகங்களுடன் சுருக்கமாகப் பேசிய கோவ்ரிக், அனைவரது ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். உரிய நேரத்தில் ஊடகங்களுடன் மிகுதி விடயங்களைப் பேசுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து மைக்கேல் ஸ்பாவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகிய இருவரும் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க வழக்கறிஞர்களுடனான ஒப்பந்தத்திற்குப் பின்னர் மெங் வான்சோ நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு கனடாவை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்தே கனேடியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கனடா மற்றும் சீன தரப்பில் இரு நாடுகளின் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் இரண்டு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக இராஜதந்திர ரீதியான பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.