Reading Time: < 1 minute

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் அறிமுகப்படுத்தும் 5-ஜி தொழில்நுட்பம் குறித்து கனடாவை அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

குறித்த தொழில்நுட்பம் கனடாவின் புலனாய்வுத் துறைசார் தரவுகளை சேகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவின் மூத்த சட்டவாளர்கள் நேற்று (சனிக்கிழமை) சர்வதேச பாதுகாப்பு சபையில் எச்சரித்தனர்.

லிபரல் அரசாங்கம்,  வரவிருக்கும் 5-ஜி வலையமைப்பை உருவாக்க உதவுவதில் இருந்து ஹவாய்  நிறுவனத்தை தடை செய்யாது விட்டால், சீன உளவுத்துறை சாதாரண கனேடியர்களின் ஏராளமான தரவுகளை சேகரிக்கும் தெளிவான நோக்கத்தை அடைந்து விடும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபேர்ட் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹூவாய் ட்ரோஜன் குதிரை பயமுறுத்துகிறது என்றும் இது திகிலூட்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், சீனாவின் செயற்கை நுண்ணறிவு, முக அங்கீகார முன்னேற்றங்கள், கண்காணிப்பு கமெராக்கள் மற்றும் மேம்பட்ட தரவு ஆகியவற்றின் திறன்கள் குறித்து விளக்கமளித்தார்.

எனவே, வயர்லெஸ் வலையமைப்புக்கள் மூலம் தரவுகளை சேகரிக்கும் சீனாவின் திறன் குறித்து அவர் எச்சரித்துள்ளார்.