கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் – கம்லூப்ஸில் அமைந்துள்ள முன்னாள் இந்தியன் குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில் இது குறித்து இரண்டு கனேடிய கார்டினல்களை போப் பிரான்சிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்து ஆலோசித்தார்.
எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கம்லூப்ஸ் பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்குடித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குடியிருப்புப் பள்ளி கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இது குறித்து உடனடி விசாரணைகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன், கனேடிய அரசு மற்றும் கத்தோலிக்க திருத்சபை இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையிலோயே இரண்டு கனேடிய கார்டினல்களை போப் பிரான்சிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதேவேளை, சிறுவர் புதைகுழி விவகாரம் தொடர்பில் போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோர வேண்டும் என கனேடிய அரசு சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.