Reading Time: < 1 minute

சிரிய அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களான 26 கனேடியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி கனேடிய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கனேடியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இதுவே உகந்த நேரம் என அந்த மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடியர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குடியுரிமை சட்டம், கனேடிய உரிமைகள், சுதந்திரம், மற்றும் குழந்தை உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் சில விதிகளை மத்திய அரசு புறக்கணித்ததாக 11 குடும்பங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிரிய அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை மீட்டுவர வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் லோரன்ஸ் கிரீன்ஸ்பான் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் சிக்கியுள்ள கனேடியர்களை மீட்டு அவா்களின் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவா் கூறியுள்ளார்.

கனேடியப் பிரஜைகளாக 14 சிறுவர்கள், 08 பெண்கள் மற்றும் 04 ஆண்கள் சிரியாவில் உள்ள அல்-ஹோல் மற்றும் அல்-ரோஜ் சிறை முகாம்கள் மற்றும் வடகிழக்கு சிரியா முழுவதும் உள்ள ஹசக்கா, கமிஷ்லி மற்றும் டெரிக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். சுத்தமான குடிதண்ணீர் கூடி இல்லாத மோசமான நிலையில் இந்த அகதிகள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் வழக்கறிஞர் லோரன்ஸ் கிரீன்ஸ்பான் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.